வரி சுமை தளர்வு… திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மீண்டும் வேகமெடுக்கும்...!
Tax burden relief Tiruppur knitwear exports regain momentum
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பதவி ஏற்றதிலிருந்து உலக நாடுகளுக்கு எதிரான பரஸ்பர வரி கொள்கையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் சுங்கவரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.

இதற்குப் பிறகும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தாததால், அதில் அதிருப்தி அடைந்த அமெரிக்கா மேலும் 25 சதவீத அபராத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக ஆகஸ்ட் 27 அன்று உயர்த்தியது. இந்த தீர்மானம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பாக திருப்பூரின் பின்னலாடை மற்றும் ஆடைத் தொழில் கடும் சிக்கலில் சிக்கியது. தயாராக இருந்த பொருட்களையே அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் தள்ளப்பட்டனர்.திருப்பூரில் ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்கா சந்தையே முக்கிய பங்காற்றுகிறது.
இதனால் அந்த வர்த்தகமே ஆபத்துக்கு உள்ளானது. எனவே வரி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தினர். பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு போன்ற சில சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், அமெரிக்க வரி குறைப்பு மட்டுமே நிலையான தீர்வாக இருக்கும் என அவர்கள் கூறினர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.அதன்படி, அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு திருப்பூர் தொழில் துறைக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (AEPC) தலைவர் சக்திவேல், “கடந்த ஆறு மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்ட கவலைக்கு இந்த அறிவிப்பு ஓர் விடுதலையாக உள்ளது. இதனால் இந்த ஆண்டிலேயே அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்தது 10 சதவீதம் கூடும்” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், “அடிப்படை வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டதால், வங்காளதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளை விட இந்தியாவுக்கு முன்னிலை கிடைக்கும். 2030க்குள் ஏற்றுமதி இரட்டிப்பு ஆகும்” என நம்பிக்கை தெரிவித்தார்.டீமா தலைவர் முத்து ரத்தினம், “இந்த அறிவிப்பு பின்னலாடைத் தொழிலுக்கு மறுமலர்ச்சி தரும்” என்றார்.
கருணாம்பிகா எம்.வி. ராமசாமி, “திருப்பூர் இனி மின்னல் வேகத்தில் முன்னேறும்” எனக் கூறினார். சைமா துணைத்தலைவர் பாலச்சந்தர், “இது தொழில்துறைக்கு புத்துணர்ச்சி” என பாராட்டினார். காஜா பட்டன் சங்க தலைவர் கருப்புசாமி, “வேலைவாய்ப்புகள் பெருகும்” என்றார். தையல் நூல் வியாபாரிகள் சங்கமும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை. அந்த வரியையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Tax burden relief Tiruppur knitwear exports regain momentum