இந்தியா- பாகிஸ்தான் மோதல் ரூ.4,500 கோடி! உலகக் கோப்பையின் ‘கோல்டன் மேட்ச்...!
India Pakistan clash worth 4500 crore golden match World Cup
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த போட்டி அதிக வருமானத்தை உருவாக்குகிறது என்றால், அது சந்தேகமின்றி இந்தியா–பாகிஸ்தான் மோதல்தான். இரு நாடுகளுக்கிடையேயான அரசியல், வரலாற்றுப் போட்டி உணர்வுகள் மைதானத்திலும் பிரதிபலிப்பதால், இந்த ஆட்டத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதேபோல், விரைவில் தொடங்கவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்தியா–பாகிஸ்தான் மோதலே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த ஒரே போட்டியின் வர்த்தக மதிப்பு சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, வணிக ஒப்பந்தங்கள், அதிகாரபூர்வ பெட்டிங் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து இந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. மற்ற எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இவ்வளவு பெரிய மதிப்பு இல்லை.
இந்த போட்டி ஏதேனும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனங்களே. இந்தியா–பாகிஸ்தான் ஆட்ட நேரத்தில் 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போட்டி நடைபெறவில்லை என்றால் விளம்பர வருவாயிலேயே ரூ.250–300 கோடி வரை இழப்பு ஏற்படும்.
இதற்கான இழப்பீட்டை ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனங்கள் கோர வாய்ப்பு அதிகம்.ஐ.சி.சி.க்கு கிடைக்கும் மொத்த வருமானத்திலும் இந்த போட்டி முக்கிய பங்காற்றுகிறது. அந்த வருவாய் குறைந்தால், உறுப்புநாடுகளுக்கு பகிரப்படும் நிதியும் குறையும்.
இதனால் ஐ.சி.சி. நிதியை மட்டுமே நம்பி செயல்படும் சிறிய கிரிக்கெட் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கும் தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படலாம்.
இந்திய வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் அதை சமாளிக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் வாரியம் பெரும் சிக்கலில் சிக்கக்கூடும்.அதோடு, ஐ.சி.சி. மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு சுமார் 5.75 சதவீதம், அதாவது ஆண்டுக்கு ரூ.315 கோடி வழங்கப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்பது போன்ற ஒப்பந்த மீறல் நடந்தால், இந்த நிதி நிறுத்தப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் உள்ளது.
English Summary
India Pakistan clash worth 4500 crore golden match World Cup