வாக்குறுதி கொடுத்தது அரசு மருத்துவமனைக்கு...முன்னுரிமை தருவது தனியார் முதலாளிகளுக்கு! - தமிழக அரசை சாடும் சீமான்
Promises made government hospitals Priority being given private employers Seeman slams Tamil Nadu government
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது மருத்துவத்துறையில் தனியார்மயத்தை தீவிரமாக ஊக்குவிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
புதிதாக 8 ஆயிரம் மருத்துவமனைகளைத் தொடங்க இணையவழி விண்ணப்பம் செய்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, மருத்துவத் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் அபாயகரமான முடிவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவோம், கிராமப்புற மருத்துவமனைகளை நவீன வசதிகளுடன் மாற்றுவோம் என்று உறுதியளித்துவிட்டு, தற்போது தனியார் மருத்துவ அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது மக்களின் நம்பிக்கைக்கு எதிரான செயலாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக மருத்துவத்துறையை முழுமையாக திறந்து விடுவது மக்கள் நல அரசியலின் அடிப்படைக் கொள்கைகளையே சிதைக்கும் செயல்” என்றும் தெரிவித்துள்ளார்.இணையவழி விண்ணப்பத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி வழங்கி, பின்னர் ஆய்வுக்குப் பிறகு நிரந்தர அனுமதி வழங்கப்படும் என்ற நடைமுறை, மருத்துவத் துறையில் ஒழுங்கின்மையும் சீர்கேடுகளும் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் வசதி பற்றாக்குறை, மருத்துவ உபகரண தட்டுப்பாடு மற்றும் நிர்வாக சிக்கல்களை சரிசெய்யாமல், திடீரென ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதன் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த அரசுகள் பின்பற்றிய தனியார்மயக் கொள்கையை தற்போதைய ஆட்சியும் தொடருமானால், மாற்று அரசியல் என்ற பெயரில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆகவே, மருத்துவத்துறையில் தனியார்மய விரிவாக்க முயற்சிகளை கைவிட்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரமுயர்த்தி, ஏழை எளிய மக்களுக்கும் தரமான சிகிச்சை எளிதில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Promises made government hospitals Priority being given private employers Seeman slams Tamil Nadu government