அதிமுக வேலுமணி அணியினரை அமைச்சரவையில் சேர்க்காத விஜய்! கடைசி நேரத்தில் வந்த மெசேஜ்!பின்னணியில் என்ன நடந்தது?
DMK seniors targeted Operation Phase 1 complete Vijay strategizes to break DMK stronghold
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக அதிருப்தியாளர் அணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இறுதியில் அவர்களை தவிர்த்தது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணமாக “கட்சித் தாவல் தடைச் சட்டம்” தொடர்பான அச்சமே இருந்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு தான் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
அந்த கட்சிகள் அனைத்தும் தேர்தலில் திமுக வாக்குகளின் ஆதரவோடு வெற்றி பெற்றிருந்ததால், திமுகவுக்கு எதிராக அரசியல் செய்த விஜய்க்கு இது அரசியல் ரீதியாக சிரமமான சூழலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், வெளி ஆதரவை மட்டும் நம்பாமல் அதிமுகவிலிருந்து ஒரு பெரிய பிரிவை தங்கள் பக்கம் இழுத்தால் ஆட்சி மேலும் வலுப்படும் என்ற யோசனை தவெக தலைமையில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் எடப்பாடி பழனிசாமியிடம் தவெக தரப்பில் மறைமுகமாக பேச்சு சென்றதாகவும், ஆனால் அவர் அதனை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னரே, எடப்பாடிக்கு எதிராக இருந்த வேலுமணி – சண்முகம் அணியுடன் தொடர்பு தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் ஒரே அணியாக தவெக அரசுக்கு ஆதரவு அளித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது என்றும் அந்த தரப்பு விஜய் அணியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு எனில் குறைந்தது 32 பேர் தேவைப்படும். அந்த எண்ணிக்கை இருந்தால் தனி அணியாக செயல்பட சட்ட ரீதியான சிக்கல் இருக்காது என்ற கணக்கில் அமைச்சரவைப் பங்கு பற்றிய விவாதங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் அதிமுக அதிருப்தியாளர் அணியால் 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது.
இதுவே கடைசி நேரத்தில் விஜய்யின் முடிவை மாற்றிய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
“35 பேர் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 25 பேரையே காட்ட முடிந்தது. இந்த எண்ணிக்கையில் அவர்களை அமைச்சரவையில் சேர்த்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பிரச்சனையாக மாறும். சட்ட சிக்கலில் சிக்கவிட விரும்பவில்லை” என்று தவெக சீனியர்கள் சிலர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று எச்சரித்திருந்ததும் தவெக தரப்பை எச்சரிக்கையுடன் செயல்பட வைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தற்போதைக்கு அதிமுக அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்ப்பதை தவிர்த்து, நிலைமையை கவனித்து செல்ல வேண்டும் என்ற முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அதிருப்தியாளர் அணியில் இதனால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டத்தில் அவர்கள் மீண்டும் எடப்பாடி அணியுடன் இணையப் போகிறார்களா? அல்லது தனி அரசியல் முடிவை எடுக்கிறார்களா? என்பது தற்போது தமிழக அரசியலில் புதிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
DMK seniors targeted Operation Phase 1 complete Vijay strategizes to break DMK stronghold