திருச்சி 'ஜி' கார்னர் மைதானத்தில் மெகா கூட்டணி தேர்தல் பிரச்சாரம் ; பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!
Prime Minister Modi will participate in the mega alliance election campaign at the G Corner ground in Trichy
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த மெகா மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில், தேமுதிக அதிமுவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
கடந்த மாதம் 23ந் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார். அதன்படி, மார்ச் 1-ந் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளார்.
அப்போது, பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 07-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்காக, திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலி மனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 03 இடங்கள் தேர்வாகியுள்ளது.
பிரச்சார இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ஜி கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வரவுள்ளதாகவும், அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Prime Minister Modi will participate in the mega alliance election campaign at the G Corner ground in Trichy