சீமானிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்... ராமநாதன் அர்ச்சுனாவிற்கு டாக்டர் இராமதாஸ் கண்டனம்!
PMk Ramadoss NTK Seeman Sri Lankan mp
பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்ட காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது சனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயல்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்தத் துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது சனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, சீமானிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMk Ramadoss NTK Seeman Sri Lankan mp