“நீங்க என்ன பண்ணிருக்கீங்கனு உங்களுக்கே தெரியாது!” – ரிஷிகாந்த், சனந்துக்கு தங்க மோதிரம் பரிசளித்த மிஷ்கின்
You have no idea what you achieved Mysskin gifts gold rings to Rishikanth and Sananth
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வெளியான ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மாற்றுப்பாலினம் தொடர்பான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெளியான ஆரம்ப நாட்களில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றதாக கூறப்படுகிறது.
படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரையும், குறிப்பாக நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரையும் பாராட்டிப் பேசினார்.
இருவரது நடிப்பையும் பாராட்டிய மிஷ்கின், அவர்கள் வழக்கமான கமர்சியல் ஹீரோ பாணியில் பயணிக்காமல் தங்களுக்கான தனித்துவமான பாதையை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். “நீங்கள் இருவரும் இப்போது ரொம்ப ஆபத்தான இடத்தில் இருக்கிறீர்கள். 200 பேரை அடித்து, 4 பெண்களை காதலித்து, அம்மா டயலாக் பேசி, அப்பாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இப்படித்தான் பெரிய ஹீரோவாக வேண்டும் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஆனால் அந்த டெம்ப்ளேட்டை உடைத்து நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகியிருக்கிறீர்கள்” என மிஷ்கின் கூறினார்.
மேலும், “வாழ்க்கையிலும் ஹீரோ, திரையிலும் ஹீரோ. நீங்கள் வளர்ந்து ரசிகர் மன்றம் எல்லாம் வைத்து காமெடி செய்துவிடாதீர்கள். மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பது இப்போது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு அது தெரியும். உங்களை நினைத்து அவர்கள் மிகவும் பெருமைப்படுவார்கள்” என மிஷ்கின் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தனது பேச்சை முடித்த மிஷ்கின், ரிஷிகாந்த் மற்றும் சனந்துக்கு எதிர்பாராத வகையில் ஒரு பரிசை வழங்கினார். தனது கைகளில் அணிந்திருந்த தங்க மோதிரங்களை கழற்றி, இருவருக்கும் அவற்றை பரிசாக வழங்கினார்.
மிஷ்கின் திடீரென தனது கைகளில் இருந்த மோதிரங்களை கழற்றி இருவருக்கும் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியில் இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. அதேபோல், இரு நடிகர்களின் நடிப்பையும் பாராட்டி அவர்களின் எதிர்காலப் பயணம் குறித்து மிஷ்கின் வழங்கிய அறிவுரையும் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
வழக்கமான கதாநாயக பிம்பத்தைத் தாண்டி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்யும் நடிகர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் மிஷ்கினின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.
English Summary
You have no idea what you achieved Mysskin gifts gold rings to Rishikanth and Sananth