“திமுகவின் சொந்த பலம் என்ன என்பது இந்தத் தேர்தலில் தெரியும்!” – இடைத்தேர்தல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பரபரப்பு கருத்து
DMK true strength will be revealed in this election Senior journalist Mani makes a sensational remark regarding the byelection
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தத் தேர்தல் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறித்து அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி, இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் தற்போதைய இடைத்தேர்தலை ஒப்பிடுவதே சரியல்ல என்று கூறிய மணி, இந்த இடைத்தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பது கவனிக்கத்தக்கது என்றார். தமிழ்நாட்டில் பொதுவாக 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இடைத்தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு என்பது அதிகமான அளவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இப்போதைக்கு யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று பேசுவதே முட்டாள்தனம். இன்னும் 24 மணி நேரத்தில் முடிவுகள் வந்துவிடும். யார் கரை சேர்ந்தார்கள், யார் கரை ஏறாமல் ஒதுங்கிப் போனார்கள் என்பது அப்போது தெளிவாகிவிடும். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. அதை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மணி தெரிவித்துள்ளார்.
தவெகவைப் பொறுத்தவரை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அது விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் கட்சியினர் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கூறினார். அடுத்தடுத்த இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உருவாகி, தொடர்ச்சியான வெற்றியை நோக்கிய அரசியல் சூழல் உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டும் தவெக வெற்றி பெற்றால் தற்போதுள்ள அரசியல் நிலை பெரிய அளவில் மாறாமல் தொடரலாம் என்றும், ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டாலும் அது விஜய்க்கு அரசியல் பின்னடைவாகவே பார்க்கப்படும் என்றும் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், தவெக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மேலும் வலுப்பெறலாம் என்றும் அவர் கூறினார். இதனால் இந்த இடைத்தேர்தல் விஜய்க்கும் தவெக அரசுக்கும் முக்கியமான அரசியல் சோதனையாக அமைந்துள்ளதாக மணி குறிப்பிட்டார்.
விஜய் இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தால் திமுக அதனை அரசியல் ரீதியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம் என்றும் மணி கூறினார். அதிமுக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியின் அரசியல் பலனை திமுகவும் தன் நிலைப்பாட்டை வலுப்படுத்த பயன்படுத்தக்கூடும் என்பது அவரது மதிப்பீடாக உள்ளது.
அதிமுக இந்த இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதாகவும், பாமக நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் மணி குறிப்பிட்டார். பாஜகவுக்கு செல்லக்கூடிய வாக்குகள் எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பாஜகவின் வாக்குகள் எதிர்ப்பு திமுக வாக்குகளாக கருதப்படும் நிலையில், அவை தேர்தல் களத்தில் எவ்வாறு பிரியும் என்பது தெளிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
திமுகவைப் பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் மற்றொரு முக்கியமான சோதனை என்றும் மணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தல் களத்தில் திமுகவுடன் இல்லாத நிலையில், கூட்டணி ஆதரவு இல்லாமல் திமுக பெறும் வாக்குகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
“நடந்து முடிந்த தேர்தலில், கூட்டணியுடன் சேர்ந்தே 59 சீட்டுகளைதான் திமுக வாங்கியது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும், அதில் கிடைக்கும் ஓட்டுகள் திமுகவுக்கான ஓட்டுகள்தான். எனவே, திமுகவின் சொந்த பலத்தை தெரிந்துகொள்ளக்கூடிய தேர்தல் இது” என்று மணி தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகள் களத்தில் பெரிய அளவில் இல்லாததும் இந்த இடைத்தேர்தலின் முக்கிய அம்சமாக இருப்பதாக அவர் கூறினார். தவெக கூட்டணியில் உள்ள திருமாவளவன் மதுராந்தகம் தொகுதியில் ஓரளவு பிரச்சாரம் செய்த நிலையில், தாராபுரத்தில் அவரது பிரச்சாரம் பெரிய அளவில் இல்லாததற்கான காரணங்கள் குறித்து பல்வேறு அரசியல் பார்வைகள் இருப்பதாகவும் மணி குறிப்பிட்டார்.
குறிப்பாக தாராபுரம் தொகுதியில் சமூக அடிப்படையிலான வாக்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக இருக்கலாம் என்று மணி தெரிவித்தார். வழக்கமாக திமுக மற்றும் அதிமுக என பிரியும் சில வாக்குகள் இந்தத் தேர்தலில் வேறு விதமாக ஒருங்கிணைகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விஜய்க்கு கிடைக்கும் வாக்குகளுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களின் வாக்குகள் ஒருங்கிணைகின்றனவா என்ற கேள்வியும் தேர்தல் களத்தில் இருப்பதாக மணி குறிப்பிட்டார். அந்த வகையில், தாராபுரம் தொகுதி வாக்கு நகர்வுகளை புரிந்துகொள்ளும் ஒரு முக்கியமான களமாக இருக்கலாம் என்பதும் அவரது கருத்தாக உள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, தற்போது முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது வெறும் இரண்டு தொகுதிகளின் வெற்றியாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சிகளின் எதிர்கால அரசியல் கணக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK true strength will be revealed in this election Senior journalist Mani makes a sensational remark regarding the byelection