நகராட்சி அதிகாரிகள் நியமன முறைகேடு: கே.என். நேருவின் மறு ஆய்வு கோரிக்கை மனு; சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!
Verdict to be delivered tomorrow on KN Nehrus revision petition regarding the case of irregularities in the appointment of municipal officials
நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்த மனு மீது, சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அத்துடன், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தனது தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இதனால் மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனு தாக்கல் செய்தார். குறித்த மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அப்போது கே.என். நேரு தரப்பில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசுத்தரப்பில், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு-வை பாதுகாத்தது வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கில், நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த அவகாசத்தை பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை என இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.
இரு தரப்பின் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், கே.என். நேரு மனு மீது தலைமை நீதிபதி அமர்வு, நாளை காலை தீர்ப்பளிக்கவுள்ளது.
English Summary
Verdict to be delivered tomorrow on KN Nehrus revision petition regarding the case of irregularities in the appointment of municipal officials