அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து - டாக்டர் இராமதாஸ்!
PMk Ramadoss condemn to central govt ed raid kerala
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட ஆய்வில் எந்தவித தவறான ஆவணங்களோ, சட்டவிரோத ஆதாரங்களோ கண்டறியப்படவில்லை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல், தொடக்கத்திலிருந்தே அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நாட்டின் ஜனநாயக அமைப்பில் மத்திய விசாரணை அமைப்புகள் சுயாதீனமாகவும், நியாயமான முறையிலும் செயல்பட வேண்டும். ஆனால் அரசியல் எதிர்ப்பாளர்களை குறிவைத்து, அவர்களின் கண்ணியத்தையும் அரசியல் செல்வாக்கையும் பாதிக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவது மிகவும் வேதனையளிப்பதாகும்.
பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் செயல்பட்டு வரும் பினராயி விஜயன் அவர்கள், எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சித் திறன் கொண்ட தலைவராக மக்களிடையே தனித்துவமான மரியாதையை பெற்றவர். கேரள மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்திய அவரின் அரசியல் பயணத்தில், எந்தவித ஆதாரமும் இன்றி நடத்தப்பட்ட இந்த அமலாக்கத்துறை சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.
ஒரு முன்னாள் முதலமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஆய்வின் முடிவில் எதுவும் கைப்பற்றப்படாத நிலை, இந்த நடவடிக்கையின் நோக்கம் உண்மையை கண்டறிவதல்ல; மாறாக அரசியல் அவப்பெயரை ஏற்படுத்துவதே என்ற கேள்வியை எழுப்புகிறது.
அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக பயன்படுத்தப்படக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், ஜனநாயக குரல்களை ஒடுக்கவும் மத்திய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு இத்தகைய சம்பவங்கள் மேலும் வலுசேர்க்கின்றன.
இந்த ஆய்வின் மூலம் பினராயி விஜயன் அவர்களின் அரசியல் நேர்மைக்கும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பிற்கும் எந்தவித களங்கமும் ஏற்படவில்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். மாறாக, அரசியல் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படும் தலைவராக அவர் மீதான மக்களின் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது.
அரசியல் பழிவாங்கும் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமான அரசியல் சுதந்திரமும், எதிர்கட்சிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்" எண்டு தெரிவித்துள்ளார்.
English Summary
PMk Ramadoss condemn to central govt ed raid kerala