சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு: பாட்டாளிப் படைகளே... அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! மருத்துவர் இராமதாஸ் மடல்! - Seithipunal
Seithipunal


பாட்டாளி சொந்தங்களுக்கு பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளில் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான்.

அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல... மாறாக நமது குடும்ப விழா.

தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒன்று திரண்டு வந்து உறவாடுவதுடன், உரிமைகளையும் கோரும் விழா தான் அது. அந்த விழா குறித்து நினைக்கும் போதே மனதில் மகிழ்ச்சியும், உடலில் சிலிர்ப்பும் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழா நடப்பாண்டில் நடைபெறவிருக்கும் நிலையில், இதுவரை இல்லாத உற்சாகம் உங்கள் மனங்களில் கரைபுரண்டு ஓடுவதை நான் அறிவேன். கிட்டத்தட்ட நானும் உங்களின் மனநிலையில் தான் இருக்கிறேன். இன்னும் 6 நாள்கள் எப்போது கழியும்? என நாள்காட்டிகளைப் பார்த்துக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நாள்காட்டிகளும் இன்னும் 6 நாள் தான் காட்டுகின்றன. மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும்.

அந்த வழக்கத்திலிருந்து விலகாமல் இந்த மாநாடும் அதே நோக்கத்திற்காகத் தான் நடத்தப்படுகிறது. மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் !

வன்னியர்களுக்கு மக்கள்தொகை, சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு!

அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு; அதற்கு வசதியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்!

தேசிய, மாநில அளவில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது!
அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்க வேண்டும்!

தனியார்துறை, உயர்நீதித்துறையில் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும்!

அனைத்து சமூகங்களின் வீழ்ச்சிக்கும், குற்றங்கள் பெருகவும் காரணமாக இருக்கும் மது, கஞ்சாவை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

கல்வி, தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு போன்றவற்றில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

ஆகிய அனைத்துக் கோரிக்கைகளும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் நோக்கமாகக் கொண்டவை ஆகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது மாநாட்டின் நோக்கம். 1988-ஆம் ஆண்டில் தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரை மொத்தம் 20 சித்திரை முழுநிலவு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

அவற்றில் பாதி மாநாடுகளை, அதாவது 10 மாநாடுகளை வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மாவீரன் குரு முன்னின்று நடத்தியுள்ளார். கடந்த காலங்களில் மாநாடுகள் எவ்வாறு நடத்தப் பட்டனவோ, அதை விட சிறப்பாக நடப்பாண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான மாநாட்டுக் குழுவினர் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், க.வைத்தி ஆகியோர் மாநாட்டுத் திடலில் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி ஆகியோர் உள்ளிட்ட பலரும் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். நடப்பாண்டிற்கான சித்திரை முழுநிலவு மாநாடு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது; சமூகநீதியில் சாதனை படைக்கப் போகிறது என்பதைத் தான் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் மாநாட்டு ஏற்பாடுகள் காட்டுகின்றன.

மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மாநாட்டின் முதன்மை அம்சம் உங்களின் வருகை தான். நீங்கள் இல்லாமல் இந்த மாநாடு இல்லை. லட்சக்கணக்கில் நீங்கள் வந்தால் தான் மாநாடு முழுமை பெறும். மாநாட்டுக்காக நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன்.... பாட்டாளிப் படைகளே, அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி" என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Chithirai muzhunilavu manadu Vanniyar Sangam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->