பாமகவினர் ரயில் மறிப்பு., சாலை முடக்கம்., போலீஸ் திணறல்.!
pmk protest
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் போராட்டக்குழுத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வன்னியர்கள் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருங்களத்தூரில் கடந்த மூன்று மணி நேரமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கூட்டம் இருப்பதால் பாமகவினரை இவ்வளவு பேர் தான் வந்திருக்கிறார்கள் என கணக்கிட முடியாமல் போலிசார் திகைப்பில் உள்ளனர். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே வழியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாமகவினர், இரண்டு முறை ரயில்களையும் மறித்து உள்ளனர். முக்கிய பொறுப்பாளர்கள் மட்டும் செல்லுங்கள் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.