தமிழகப் பெண்களை விலைமாதர்கள் என இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன்? ஆளும் திமுகவின் ஆதரவு காரணமா? அன்புமணி இராமதாஸ் வினா! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "நடிகர் விஜய் தலைமையிலான கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு, அந்தக் கட்சியில் உள்ள பெண்களை விலைமாதர்கள் என்ற பொருள்படும் அருவருக்கத்தக்க சொல்லைக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறார் பொன்ராஜ் என்பவர். அரசியல் விமர்சகர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் பேசி வரும் பொன்ராஜ் தமிழ்நாட்டு பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும் கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து அண்மையில் சர்ச்சைகள் எழுந்த போது, அவருக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய்க்கான அவரது கட்சியினரின் கண்மூடித்தனமான ஆதரவைத் தான் அது காட்டுகிறதே தவிர, அதற்கு மேல் அதில் ஆராய்ச்சிகள் செய்வதற்கு எதுவுமில்லை; அது தேவையுமில்லை; தமிழ்நாட்டின் இன்றைய சூழலுக்கு அது அவசியமுமில்லை. ஆனால், அப்துல்கலாமின் ஆலோசகர் என்றும், அரசியல் விமர்சகர் என்றும் பிழைப்பு நடத்தி வரும் பொன்ராஜ், விஜயின் கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் விலைமாதர்கள் என்று கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் நாகரிகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களால் இதை ஏற்கவே முடியாது.

தமிழ்ச் சமூகம் பெண்களை கடவுளாக வணங்கும் வழக்கம் கொண்டதாகும். பெண்களை இழிவுபடுத்தும் எவரையும் தமிழ்ச் சமூகம் மன்னித்ததே இல்லை. அறத்தின்படி பார்த்தாலும், சட்டத்தின்படி பார்த்தாலும் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும். ஆனால், இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது  வழக்கும் பதிவு செய்யாமல், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் குறித்து எதிர்க்கட்சியினர் எதையாவது பேசினால் உடனடியாக சம்மன் அனுப்பி விசாரிக்கத் துடிக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்டனம் கூட தெரிவிக்காமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பெண்களை இழிவுபடுத்திய கயவரை காவல்துறை கைது செய்யாமலும், மகளிர் ஆணையம்  விசாரணை நடத்தாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களைத் தேடி ஆராய்ச்சிகள் நடத்தத் தேவையில்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் திமுகவின் கூலிப்படையாக அவர் முழங்கிக் கொண்டிருப்பது தான். பெண்களை இழிவுபடுத்தும் அனைத்துக் கயவர்களின் புகலிடமாக திமுக மாறி வருகிறது. பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்; கடைசியில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுத்து விட்டால் அவர்கள் அனைத்தையும் மறந்து திமுகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற அக்கட்சித் தலைமையின் திமிருக்கும், அகந்தைக்கும் வரும் தேர்தல் முடிவு கட்டுவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumni ramadoss condemn to dmk mk stalin ponraj case


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->