இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது! வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Reservation Data TN Govt Mk Stalin DMK
இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரின் அறிக்கையில்: "தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தன்னாட்சி உரிமை, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் குழு, 1971ம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் சமூக நீதியின் பயன்கள் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடாமல், சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வது அர்த்தமற்றது ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்ட குழுவின் முன்னாள் துணைத் தலைவர் நாக நாதன் ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை வரும் ஜனவரி மாதத்திற்குள்ளாகவும், இறுதி அறிக்கையை இரு ஆண்டுகளுக்குள்ளாகவும் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் ஒரு கட்டமாக 1971ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட சமூக, பொருளா தார மாற்றங்கள் குறித்தும் குரியன் குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார மாற்றங்களையும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி நடவடிக்கைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக நிலையிலும், கல்வி, வேலை வாய்ப்பிலும் பின் தங்கிய நிலையில் உள்ள சமூகங்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1971ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கும் நீதியரசர் குரியன் ஜோசப் குழு, அதற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி நடவடிக்கைகள் எந்த அளவுக்கு துணை நின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு வசதியாக அது குறித்த விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு தான் சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் அதனால் ஒவ்வொரு சமுதாயத் துக்கும் ஏற்பட்ட பயன்கள் ஆகியவை குறித்து எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 1969ம் ஆண்டில் சட்ட நாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும், 1982ம் ஆண்டில் அம்பா சங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடுகளால் ஒவ்வொரு பிரிவிலும் மேல் மட்டத்தில் உள்ள சில சமூகங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவிப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்ததுடன், இந்த நிலையை மாற்ற உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததன. ஆனால், அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.
இந்த இரு ஆணையங்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாத நிலையில், ராமதாஸ், தலைமையில் வன்னியர் சங்கம் தொடர்ந்து பத்தாண்டுகள் நடத்திய போராட்டம் மற்றும் உயிர்த் தியாகத்தின் பயனாகத்தான் 1989ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின் 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இது சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
சட்ட நாதன் ஆணையம் 1970ம் ஆண்டில் அளித்த பரிந்துரையில், ”ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத் திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூக நீதி கிடைத்துள்ளதா ? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின் 55 ஆண்டுகளாகியும் அந்தப் பரிந்துரை இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. இந்த சமூக அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் எந்த அளவுக்கு பயனடைந் திருக்கின்றன என்பது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்படாததை நியாயப்படுத்துவதற்காக, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.50%-க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக பொய்யான தகவல்களை வெளியிட்ட திமுக அரசு, பிற சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மறுப்பது ஏன் ?
அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதனால் ஏற்பட்ட பயன்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை ஆகும். இந்தக் கடமையில் இருந்து தவறுவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். எனவே, 1971ம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கும் குரியன் குழு, அதற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பங்களித்தன என்பது குறித்தும் ஆராய வேண்டும்.
அதற்கு வசதியாக, தமிழ்நாட்டில் 1971 முதல் 1980ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த 49% இட ஒதுக்கீடு, 1980ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த 68% இட ஒதுக்கீடு, 1989ம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு உருவாகப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது முதல் இப்போது வரை நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு ஆகியவற்றால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்கு உட்படுத்துமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Reservation Data TN Govt Mk Stalin DMK