கையாலாகாத திமுக இனி ஒரு நிமிடம் கூட ஆட்சிப் பொறுப்பில் நீடிக்கக் கூடாது! அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.
திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று திரும்பிய மாணவியை அதே கும்பல் மீண்டும் மகிழுந்தில் கடத்திச் சென்று நடந்த கொடுமை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. மாணவி கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதால் மேலும் பல தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் நிலைநிலவுகிறது என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, காட்டாட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஆனால், இதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கடைசி நேரக் கொள்ளையிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கையாலாகாத அரசு. மக்களைக் காப்பதற்கு துப்பற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin