'திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும்; இறுதியில் வாய்மையே வெல்லும்; முருகனே வெல்வார்' பிரதமர் மோடி பேச்சு..!
PM Modi says no matter what DMK government does Murugan will win in the end
மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, ''தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும்'' என்று உறுதியளித்துள்ளார். அதன் பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

சுவாமி தரிசனத்தை தொடர்ந்து மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது ''வெற்றிவேல்... வெற்றிவேல்... வெற்றிவேல்'' என மோடி, முழக்கமிட்டு தனது பிரச்சார பேச்சைத் தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இங்கு வருவதற்கு திருப்பரங்குன்றம் சென்று கடவுள் முருகனைத் தரிசித்து, தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைய வேண்டினேன். தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி பூரணச் சந்திரன் எனும் இளம் பக்தர் உயிர் தியாகம் செய்ததை நினைத்து பார்த்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பூரண சந்திரனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகளைச் சந்தித்து, எனது இரங்கலை தெரிவித்தேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய முருகனிடம் வேண்டினேன் என்று கூறியுள்ளார்.

மேலும், திமுக அரசின் நியாயமற்ற தன்மையின் காரணமாக இது நடந்துள்ளது என்பது வருத்தத்தை கொடுத்ததாகவும், திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மலேசியாவுக்கு கடந்த மாதம் சென்றிருந்த போது, அங்கு தமிழ் கலாச்சாரத்தை ஆதரிக்க வேண்டி, மலாய் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைத்திருந்தோம். தற்போது திருவள்ளுவர் மையத்தையும் ஏற்படுத்தி வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பின் அவர்களது கனவு எல்லாம் கானல் நீராக மாறிவிடும் என்று பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களை காட்டி பேசியுள்ளார்.
அத்துடன், இந்தத் தேர்தல் மாநிலத்திற்கான திருப்புமுனைத் தேர்தல் என்றும், திமுக வெளியேற்றப்பட்டாக வேண்டும் என்பதையும், என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் எனவும் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு 2021-இல் தான் திமுக முழு மெஜாரிட்டியை பெற்றது. ஆனால், திமுக சிறந்த ஆட்சியை கொடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு, எம்.ஜி.ஆர்.க்கு உறுதுணையாக நின்றது மதுரை. அதன் காரணமாக திமுக அரசு, மதுரையை விரும்பவில்லை. மாஃபியா அரசியலை செய்கிறது என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
திமுகவும், காங்கிரஸும் 2014க்கு முன் கூட்டாட்சியில், மதுரவாயில் மேம்பாலம், தூத்துக்குடி கப்பல் சரக்கு மாற்று திட்டம் ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டது. 2014க்கு பிறகு நாங்கள்தான் இவற்றை எல்லாம் மீண்டும் தொடங்கினோம்” என பேசினார்.
இந்த மதுரை பொதுக்கூட்டத்தில், என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
PM Modi says no matter what DMK government does Murugan will win in the end