நாடகம், ஆட்சி கட்டில், பழிவாங்கும் செயல் - கொந்தளிப்பில் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ல் காலவரையற்ற போராட்டம் நடத்திய போது, தங்களது ஆட்சி அமைந்ததும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த திமுக, தற்போது  அதனை செவி சாய்த்து கூட கேட்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்று கூறி, அதை மக்களிடம் பரப்பி, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவோம் என்பது போல மேடைக்கு மேடை நாடகமாடி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களின் வருங்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், விடியலை நோக்கி என்று சொல்லிவிட்டு விரக்தியின் உச்சத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் தி.மு.க. அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசு, பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தி தி.மு.க. அரசு, தற்போது அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கேற்ப இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் பணியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் அரசு மருத்துவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மருத்துவர்கள் இன்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பது உண்மையிலே மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதன்மூலம், “திராவிட மாடல்" என்று சொல்லிக் கொண்டு, "பாசிச மாடல்" அரசை தி.மு.க. அரசு நடத்திக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். 

அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார். 

மேலும், போராடுவது அவர்களுடைய உரிமை மற்றும் கடமை என்றும், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் வெளி வந்தன.

இன்று, தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அரசு மருத்துவர்களுடைய கோரிக்கையினை செவி கொடுத்துக் கூட கேட்க அரசு தயாராக இல்லை என்று செய்திகள் வருகின்றன. 

அவர்களுடைய கோரிக்கையே முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதைக்கூட தி.மு.க. அரசிற்கு நிறைவேற்ற மனமில்லை. மாறாக, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

அண்மையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர்க் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக அரசு மருத்துவர்கள் மேற்கொண்டதாகவும், வருகின்ற 30-ஆம் தேதி மவுனப் போராட்டம் நடத்த உத்தேசித்து இருந்ததாகவும், இந்தச் சூழ்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், போராட்டக் குழுவின் நிர்வாகிகள்மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 

போராடுவது அவர்களது உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதலமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது நியாயமா என்பதை முதலமைச்சர் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்குப் பெயர்தான் "சொன்னதை செய்வோம்" என்பதா? தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்வதோடு, கொடுங்கோல் ஆட்சி நீண்டநாள் நீடிக்காது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About DMK Govt Worst 112022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->