ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது - சீமான்! - Seithipunal
Seithipunal


ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 'இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?' வேறு நாட்டிற்கு செல்லுங்கள்! என்ற உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மிகுந்த மனவலியைத் தருகிறது.

ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளாம் 10 கோடி தமிழர்கள் நாங்கள், நிலைத்து வாழ்கின்ற பெருத்த நிலப்பரப்பாம் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது என்பதைவிடவும் என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்?

இந்திய மாநிலங்களிலேயே அதிக வரி செலுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் வருமானத்திலும், பெருமளவு பங்களிப்பு செய்யும் தமிழர்கள் நாங்கள் இந்த மண்ணில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்?

தமிழர்கள் நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம், என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா?

சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கு இங்கு வாழும் உரிமை உண்டு. இந்திய நாடு அவர்களுக்கு எண்ணற்ற வசதிகளைச் செய்து வாழ்விக்கும்போது, அவர்களை நோக்கி எழுப்பப்படாத
இது என்ன சத்திரமா? என்ற கேள்வி, எம் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் குடியுரிமை கேட்கும்போது எழுவது ஏன்? இதே கேள்வியை பாகிஸ்தானிடமிருந்து வருகின்ற இந்துக்களிடமோ, சீனாவின் திபெத்தியர்களிடமோ கேட்டுவிடத்தான் முடியுமா?

அடிமைப்படுத்தி ஆண்ட பல ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் வந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவின் சீக்கியர்கள் உள்ளிட்ட  இலட்சக்கணக்கான ஆதரவற்ற உலக மக்களை அள்ளி அரவணைத்து குடியுரிமை முதல் விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் பங்கேற்க அனுமதியும் வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய அதிக பொறுப்பும் - கடமையும் வரி செலுத்தி, வாக்கு செலுத்தி நான் நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?

 'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் சத்திரமா? என்று கேள்வி எழுப்பினால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேச பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படி செய்வது முறைதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? 
இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா?

ஈழத்தமிழருக்கும் இந்திய நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை அழித்தொழிக்க இந்தியப் பெருநாடு அமைதிப்படையை அனுப்பியதுதான் ஏன்? என்ற கேள்விக்கு இந்த நாட்டில் எந்த நியாயவான்களிடம் பதிலுண்டு?

பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பீர்களானால், அவர்களிடம் குடிகொண்டுள்ள
தனித்திறமைக்கு என்ன மதிப்பு உள்ளது? என்ன அங்கீகாரம் உள்ளது? அதனைத் தடுப்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது இல்லையா? அகதி என்பதற்காக தனித்திறனை, விடாமுயற்சியை, கடும் உழைப்பை, வாழ்க்கை இலட்சியத்தை அழிப்பது மனிதத்திற்கு எதிரானது இல்லையா?

அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்தது குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா? அகதியாக்கப்ப்பட்ட காரணத்திற்காக, இந்த நாட்டில் பிறந்த அவர்களின் பிள்ளைகளுக்கும் கூட மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி, வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்படாதது எவ்வகையில் நியாயமாகும்? இதுதான் இந்த நாடு கட்டிகாக்கும் தர்மமா?

இந்திய குடியுரிமை இல்லாத ஒற்றைக்காரணத்திற்காக, திருச்சியில் வாழ்ந்து வரும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜா உள்ளிட்ட எத்தனை எத்தனை ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் என்பதை எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் தன்னகத்தே கொண்டு உலகிற்கு அன்பையும், அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த நாடானது, நம்மைப்போல இரத்தமும், சதையும், உயிரும், உணர்வும் கொண்ட சக மனிதர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? 
அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்த கூடுதல் சலுகையும் இந்த நாடுதர வேண்டாம். குறைந்தபட்சம் மனிதர்கள் என்பதற்காகவது மனிதநேயத்தோடு நடத்தலாமே?

எனவே, இந்தியப் பெருநாடு ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்குள்ள தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில்
இரட்டை குடியுரிமை, தற்காலிக குடியுரிமை, சிறப்பு குடியுரிமை, என்ற பெயரிலாவது அவர்கள் தங்களுடைய தனித்திறனை அடையாளப்படுத்தவும், உலக அரங்கில் அங்கீகாரம் பெறவும் அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, கோடிக்கணக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாய் திகழும் இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு முற்று முழுதாக குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பினை மறுசீராய்வு செய்து, குறைந்தபட்சம் தற்காலிக சிறப்பு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்டு தமிழர்களின் மனவலியைப் போக்கிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Sri Lankan Tamil People indian Citizenship issue SC order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->