இனி எல்லாம் செங்கோட்டையன்தான்.. முழுசாய் கட்டுக்குள் வந்த விஜய்? படுத்தே விட்ட புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் என்ன நடக்கிறது?
Now everything is Sengottaiyan Vijay who has come under complete control Pussy Anand who has left him lying down What is happening in Tvk
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகர் விஜய்யை முதல்வராக்குவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வெற்றி கழக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் சொல்வதைத்தான் கட்சி செய்யும் என்றும், அவர் வகுக்கும் ரூட்டில்தான் விஜய் அரசியல் பயணத்தை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டபோது கட்டுக்கோப்பான அரசியல் செயல்பாடு இல்லை, அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த குற்றச்சாட்டுகளை போக்கும் வகையில், எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் கட்சியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 25 வயதில் எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட செங்கோட்டையன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்சியில் இணைந்த உடனேயே செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக விஜயின் அரசியல் பயணத் திட்டங்களை வகுக்கும் முழு அதிகாரமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனியர் அரசியல்வாதி என்ற முறையில் செங்கோட்டையனை மதித்து செயல்பட வேண்டும் என்று விஜய் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், விஜயை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் தனது ரத்தத்தில் கலந்துள்ளதாக உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுக்கு முழு உரிமையும் மரியாதையும் வழங்கப்படும் என்றும், இனி அவரது வழிகாட்டுதலில்தான் கட்சி பயணிக்கும் என்றும் கூறினார். இதன் மூலம், முன்பு விஜயை யாரும் நேரடியாக சந்திக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்த ஆனந்த், செங்கோட்டையனை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜய் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன் மாவட்ட ரீதியான பயணங்களை முடிக்க வேண்டும் என்பது செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு என சொல்லப்படுகிறது. குறிப்பாக கொங்கு மற்றும் தென்மாவட்டங்களில் விஜய்க்கு செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலும், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதரவை வலுப்படுத்தும் வகையிலும் பயணத் திட்டங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னை எண்ணூரிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவர் கிராமங்களில் விஜய் மக்களை சந்திக்கும் இரண்டாம் கட்ட பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் ஆகிய தரப்பினரை மையமாகக் கொண்ட இந்த அரசியல் பயணத்தின் முழு கட்டுப்பாடும் செங்கோட்டையனிடமே இருக்கும் என்றும், விஜயின் தினசரி செயல்பாடுகளில் அவர் ‘ஆக்சன்–கட்’ சொல்லும் நிலை உருவாகியுள்ளது என்றும் தமிழக வெற்றி கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Now everything is Sengottaiyan Vijay who has come under complete control Pussy Anand who has left him lying down What is happening in Tvk