இனி ஒரு உயிர் கூட லாக்கப்பில் போகக்கூடாது...! - தமிழக அரசை நோக்கி கர்ஜித்த பிரேமலதா விஜயகாந்த்...!
Not single life should go lockup anymore Premalatha Vijayakanth roared at Tamil Nadu government
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகேயுள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறி கடந்த ஜூலை 9-ஆம் தேதி தென்தாமரைக்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை 13-ஆம் தேதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டபோது முழு உடல்நலத்துடன் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர், சில நாட்களிலேயே உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அவசியத்தை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மட்டும் போதுமான நடவடிக்கையாக கருத முடியாது. உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இந்த விவகாரத்தில் நீதி கிடைத்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தமிழகத்தில் ஏற்கனவே பல காவல் நிலைய உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.சட்டத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் அதிகாரம் மட்டுமே தவிர, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் உரிமை எந்த நபருக்கும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றத்தை உறுதியளித்து ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்கத் தவறி வருவது வருத்தமளிப்பதாகவும், மக்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்ட மாற்றம் நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை என்பதையே இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர், இந்த உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்ட அவர், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதுடன், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Not single life should go lockup anymore Premalatha Vijayakanth roared at Tamil Nadu government