பட்டினப்பாக்கம் வேண்டாம்.. பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகமா? விஜய் அரசு அடுத்தகட்ட ஆலோசனை! - Seithipunal
Seithipunal


பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, மாற்று இடமாக பல்லவன் இல்லத்தை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி, வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் நிலத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான அரசாணையும் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டத்திற்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, காமராஜர் உள்ளிட்டோர் பணியாற்றிய புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்தார். மீனவர்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது என்றும், புதிய தலைமைச் செயலக திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இப்போதைக்கு எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சென்னை பல்லவன் இல்லம் மாற்று இடமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது பல்லவன் இல்லம் பகுதியில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பணிமனைகளுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள பல்லவன் இல்லம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தின் நிர்வாகக் கட்டடங்களை அமைக்க முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டப்பேரவை மட்டும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்படவும், புதிய இடத்தில் தலைமைச் செயலகத்தின் நிர்வாகக் கட்டடங்களை மட்டும் அமைக்கவும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதேபோல் திருவிடந்தை, தையூர், பல்லவன் இல்லம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களும் புதிய தலைமைச் செயலகத்துக்கான மாற்று இடங்களாக பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பட்டினப்பாக்கத்தில் எழுந்துள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடுமா, அல்லது வேறு இடத்தை தேர்வு செய்து திட்டத்தை முன்னெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்லவன் இல்லம் உள்ளிட்ட மாற்று இடங்களில் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்குப் பிறகே இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No to Pattinapakkam A new Secretariat at Pallavan Illam Vijay party mulls next steps


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->