தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 48 மணிநேரம் தான் கெடு; இல்லையென்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்; சிஜேபி அபிஜீத் தீப்கே எச்சரிக்கை..!
CJPs Abhijeet Dipke has warned that nationwide protests will be held if the Chief Election Commissioner does not resign
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், மீண்டும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சிகள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து பட்டியலைத் திருத்துவதற்காக Special Intensive Revision (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், SIR நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், SIR நடைமுறைக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றமை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அவர், 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யாவிட்டால், டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
குறித்த போராட்டம் ஏற்கெனவே நடைபெற்ற ஜந்தர் மந்தர் போராட்டத்தைப் போன்றதாக இருக்கும் என்றும் CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக்கூடாது என்பதை அரசு தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CJPs Abhijeet Dipke has warned that nationwide protests will be held if the Chief Election Commissioner does not resign