லஞ்சத்துக்கு இனி ‘நோ’... “பணம் கொடுத்தால்தான் வேலை” என்ற நிலை மாறும்...! - அமைச்சர் ஆனந்த்
No more no bribery situation of work only if you pay will change Minister Anand
மணப்பாறை அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாட்டின் பொதுமாநாடு நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
உலகிலேயே தூய்மை பணியாளர்களைப் போல அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர்கள் வேறு யாரும் இல்லை என்று புகழாரம் சூட்டிய அமைச்சர், தூய்மை பணியாளர்களின் நலனுக்காக கடந்த காலங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்பது புரியவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது முதலமைச்சர் விஜய், தூய்மை பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் உறுதியளித்தார்.முதலமைச்சர் விஜய்யின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
ஏழை மற்றும் எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது என்றும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அக்கட்சி நீண்ட காலமாக போராடி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், தமிழக வெற்றிக்கழகமும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செயல்படும் கட்சி என்றும் அவர் கூறினார்.கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை இனி இருக்காது என்றும், தற்போதைய முதலமைச்சர் ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்கள் தங்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தபோது, அவர்களின் நிலை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட அமைச்சர், “உங்கள் முதலமைச்சர் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்” என்று நம்பிக்கை அளித்தார்.
மேலும், லஞ்சம் பெறாமல் நேர்மையாக செயல்பட்டாலே சமூகத்தில் செழிப்பை உருவாக்க முடியும் என்றும், இனி லஞ்சத்திற்கு இடமில்லாத நிர்வாகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
English Summary
No more no bribery situation of work only if you pay will change Minister Anand