டெல்டாவுக்கு வறட்சி முத்திரை...? ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி கோரிக்கை...!
Delta marked drought Relief 15 thousand per acre Communist Party India demands action
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது," குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், விவசாய வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சி பாதித்த பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பழங்குடியின மக்களின் நலனுக்காக தனித்துறை உருவாக்க வேண்டும் என்றும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரை அவர்களை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவித்தார்.
பழங்குடியின பெண்களுக்காக ஊட்டச்சத்து தொகுப்பு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.டாஸ்மாக் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்துவது மட்டும் தீர்வாகாது என்றும், அரசு புதிய மருத்துவமனைகளை அமைத்து ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
English Summary
Delta marked drought Relief 15 thousand per acre Communist Party India demands action