அண்ணாமலை எப்படி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை...! இது அதிமுக ஆட்சியிலும் நடந்துள்ளது...! -மா. சுப்ரமணியன்
No matter what Annamalai says I dont care This has happened during AIADMK regime too Ma Subramanian
சென்னை எழும்பூரில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், அங்குள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்த அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனைகளுக்கு தேவையான விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அவ்வகையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 82,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரு. 53 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதித்த குழந்தைகள் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் சிகிச்சை பெற வசதியாக இந்த புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதியும் செய்யப்படும்.
இதே போல புதிதாக விடுதி கட்டப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெறும் ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் தங்குவதற்கு வசதியாக 5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 அடுக்குமாடிகளுடன் இந்த விடுதி அமைகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் நடத்தப்பட்டதில் பதிவு கட்டணமாக பெறப்பட்ட ரூ .1 கோடியே 22 லட்சம் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வளாகத்தில் படுத்து தூங்குகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு சட்டமன்ற விடுதியில் தங்க வைத்து உதவி செய்து வருகிறோம். தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் 100 பேர் தங்கி சிகிச்சை பெற முடியும். செப்டம்பர் மாத இறுதியில் இந்த பணிகள் நிறைவடைகிறது. குழந்தைகள் சிகிச்சை பெரும் வரை பெற்றோர்கள் இங்கு தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படும். தங்குவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை.
தரைதளத்தில் சமையலறையும் உணவுக்கூடமும் அமைகிறது. ஒரு தளத்தில் 25 படுக்கைகள் வீதம் நான்கு தளத்தில் 100 படுக்கை வசதி செய்யப்படுகிறது.நாமக்கல்லில் நடந்த சம்பவம் சிறுநீரகம் திருட்டா அல்லது முறைகேடா என்று பட்டிமன்றம் நடத்த நான் விரும்பவில்லை. அண்ணாமலை எப்படி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.
2019-ம் ஆண்டில் இதே நாமக்கல்லில் நடந்த சிறுநீரக முறைகேடு வழக்கில் அ.தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்ததோடு சரி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே ஊரில் தான் இப்போதும் சிறுநீரக முறைகேடு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.ஆரம்பகட்ட அறிக்கையின்படி இரண்டு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 அல்லது 5 நாட்களில் முழுமையான அறிக்கை வரும். அப்போது இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளை விற்று பிழைப்பது ஈனப் பிழைப்பாகும்" என்று தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்வி இயக்குனர் தேரணி ராஜன், இயக்குனர்கள் லட்சுமி வேல்முருகன், சுமதி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
English Summary
No matter what Annamalai says I dont care This has happened during AIADMK regime too Ma Subramanian