புதிய பரபரப்பு! தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம்…! - 3-ல் முடிக்க நினைக்கும் தி.மு.க!
new sensation Makkal Needhi Maiam demanding constituencies DMK aiming conclude 3 seats
2018-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம், ஆரம்ப காலத்திலிருந்தே தனித்த அடையாளத்துடன் அரசியல் களத்தில் பயணம் செய்து வருகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட இந்த கட்சி, வெற்றி பெறாவிட்டாலும் 0.40 சதவீத வாக்குகளை பெற்றது.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 180 தொகுதிகளில் களம் இறங்கி, அனைத்திலும் தோல்வி கண்டாலும், 2.62 சதவீத வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.அதன் பின்னர், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம், நேரடி போட்டி சீட் பெறாவிட்டாலும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கைப்பற்றியது.

இதன் மூலம் கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.இந்த அரசியல் பின்னணியில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில், கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவது, எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைக் குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் முடிவில், மக்கள் நீதி மய்யம் 15 ‘டார்கெட்’ தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி, ஆலந்தூர், தியாகராயநகர் ஆகிய நகர்ப்புற மற்றும் செல்வாக்கு மிக்க தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தி.மு.க. தலைமையோ, மக்கள் நீதி மய்யத்துக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவு செய்து வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகமெங்கும் கமல்ஹாசனை முன்னிறுத்தி பிரசார களத்தில் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கோரும் 15 தொகுதிகளுக்கும், தி.மு.க. தரப்பின் 3 தொகுதி கணக்குக்கும் இடையே உருவாகியுள்ள இந்த இடைவெளி, கூட்டணி பேச்சுவார்த்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new sensation Makkal Needhi Maiam demanding constituencies DMK aiming conclude 3 seats