மத்திய அரசு அனுமதி: ரூ.450 கோடியில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்...! - முதல்வர் ரங்கசாமி தகவல்
Central government approval Puducherry airport expansion cost 450 crore cm Rangasamy informs
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை வளாக திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதியோர் ஓய்வூதியமாக உயர்த்தப்பட்ட ரூ.500 தொகை வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட ரூ.2,500 உதவித் தொகை பிப்ரவரி 10-ம் தேதி முதல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அடுத்த வாரமே 190 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். அதேபோல், அடுத்த மாதத்தில் 400 இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 4,000 இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், விரைவில் மேலும் 500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் துறைகளின் வாயிலாக சுமார் 10,000 பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
சேதராப்பட்டில் நீண்ட காலமாக பயன்பாடின்றி உள்ள 750 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் பல தொழிற்சாலைகள் உருவாகி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மீனவர் சமூக மேம்பாட்டுக்காக ரூ.123 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் பெரிய திட்டங்களை செயல்படுத்த முடியாது என கூறிய முதல்வர், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும், அந்தப் பயணத்தின் போது பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக ரூ.450 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் விமான நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.இந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.பி. செல்வ கணபதி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Central government approval Puducherry airport expansion cost 450 crore cm Rangasamy informs