‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்: சென்சார் பிரச்சனை முடிவுக்கு வருமா? தீர்ப்பு எப்போ தெரியுமா?
Jananayakan censorship issue Will the censorship issue end When will the verdict be known
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், ஜனவரி 5ஆம் தேதி மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பிய முடிவு தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்க்காமல் ஜனவரி 6ஆம் தேதியே தணிக்கைச் சான்றிதழ் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மறுஆய்வு உத்தரவை சவால் செய்யாத நிலையிலும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படாத நிலையிலும், தனி நீதிபதி தணிக்கை வாரிய முடிவை ரத்து செய்தது தவறான நடைமுறை என வாதிட்டார்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 14 காட்சிகளை நீக்க வேண்டும் என CBFC பரிந்துரை செய்ததாகவும், அது இடைக்கால முடிவு மட்டுமே என்றும், பின்னர் மறுமதிப்பீடு செய்யப்பட இருந்ததாகவும் விளக்கப்பட்டது. இருப்பினும், கிடைத்த புகார்களின் அடிப்படையில், படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப வாரியம் முடிவு செய்தது என தெரிவிக்கப்பட்டது. மறுஆய்வுக் குழு திரைப்படங்களை பார்த்து பரிந்துரை செய்யும் அமைப்பு மட்டுமே; இறுதி சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தணிக்கை வாரியத்திடமே உள்ளது என்பதையும் CBFC தரப்பு சுட்டிக்காட்டியது.
இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்ததால் அவசர விசாரணை கோர வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார். மேலும், வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படாத நிலையில், ஓடிடி தளங்கள் தங்கள் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என தயாரிப்பு நிறுவனம் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் போது நீதிபதிகள், ஒரே நாளில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பிறப்பிப்பது வழக்கமல்ல எனக் குறிப்பிட்டனர். மேலும், திரைப்படம் ஒரு வணிக முயற்சி என்பதால், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், பாலிவுட்டில் தணிக்கைச் சான்றிதழுக்கு முன்பே வெளியீட்டு தேதியை அறிவிப்பது வழக்கமான நடைமுறையாக இருப்பதாகவும் விளக்கினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த முக்கிய வழக்கின் தீர்ப்பு, ஜனவரி 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வால் வழங்கப்பட உள்ளது.
English Summary
Jananayakan censorship issue Will the censorship issue end When will the verdict be known