6 தொகுதிகள் தாண்டாத விசிக..12தொகுதிக்கு அடிப்போடும் ஆண்டவர்! விருப்ப தொகுதிகள் பட்டியலுடன் ஸ்டாலினை சந்திக்கும் கமல்? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று காலை 10 மணிக்கு சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளை கோருவது என்பன குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன், கடந்த 8 ஆண்டுகளாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட பொதுச் சின்னமாக ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது கட்சிக்கு ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 0.40 சதவீத வாக்குகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் 4ஆவது அணியாக களம் இறங்கியது. அந்த தேர்தலில் மநீம 110 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், 2.62 சதவீத வாக்குகளை பெற்றது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம், அந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்காக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். இதன் பலனாக, மநீமுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டு, கமல்ஹாசன் தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.

ஒருகாலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து, டிவியை உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்திய கமல்ஹாசன், பின்னர் அதே திமுகவுடன் கூட்டணி அமைத்தது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவரது தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறும் போது, திமுக சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வைக்கப்படுவோமா என்ற கவலை மநீம தரப்பில் உள்ளது. கடந்த காலங்களில் கொமதேக, ஐஜேகே, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சிறிய கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அனுபவங்களும், மதிமுகவின் சின்ன விவகாரமும் கமல்ஹாசனை எச்சரிக்கையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், எந்தவித சமரசமும் இல்லாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். மேலும், கோவை தெற்கு தொகுதி உள்ளிட்ட சில சென்னை தொகுதிகளையும் மநீம கோரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK which did not cross 6 seats will be defeated by Andavar for 12 seats Kamal to meet Stalin with a list of preferred seats


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->