''நான் பிரதமரை சந்திப்பதில் நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமில்லை: அவர் சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை'': ஓபிஸ் பதிலடி..!
Nayinar Nagendran is not interested in me meeting the Prime Minister says OPS
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமரை சந்திப்பது தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
''தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், “தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. நயினார் நாகேந்திரனை ஆறு முறை செல்போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம் மற்றும் பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் தொலைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம்.
ஆனால் எதையும் செய்யவில்லை. இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜ தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.'' என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nayinar Nagendran is not interested in me meeting the Prime Minister says OPS