டெல்லியில் நயினார்–அமித்ஷா சந்திப்பு…! - கூட்டணி கணக்கு தொடங்கியதா...?
Nayinar Amit Shah meeting Delhi Has alliance started counting
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் சூழலில், கடந்த தேர்தலைவிட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜனதா தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது.
தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியில் தனது அரசியல் முத்திரையை மேலிடத்தில் பதிக்க முழு வேகத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்த ரகசிய ஆலோசனைகள் முடிவடைந்துள்ளதாகவும், அந்த பட்டியலை மேலிடத்திடம் சமர்ப்பிக்கவே அவர் நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த பின்னணியில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்ற நயினார் நாகேந்திரன், சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பில் ஈடுபட்டார். இரவு 10.20 மணியளவில் அவர் வெளியே வந்தார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,“அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். கூட்டணி விவகாரம் அல்லது தொகுதி பங்கீடு குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை.
இன்று காலை பா.ஜனதா தேசிய செயல் தலைவரை சந்தித்துவிட்டு சென்னை திரும்புவேன்” என்று தெரிவித்தார்.ஆனால் அரசியல் வட்டாரங்களில், அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்ப செல்வாக்கு உள்ள தொகுதிகளில் களப்பணியை தீவிரப்படுத்த அமித்ஷா நேரடியாக உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனவரி இரண்டாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை, நயினார் நாகேந்திரன் அமித்ஷாவிடம் வழங்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த பட்டியலில் பரமக்குடி, சாத்தூர், பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி,மேற்கு மண்டலத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர், சிங்காநல்லூர்,சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி,தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், நெல்லை, மதுரை வடக்கு உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு, அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள 15 தொகுதிகளின் தனிப் பட்டியலையும் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நகர்வுகள் அனைத்தும், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
English Summary
Nayinar Amit Shah meeting Delhi Has alliance started counting