ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…! 36 லட்சம் பேரின் விரல் ரேகை பதிவு இன்னும் முடியவில்லை...!
Important notice ration card holders Fingerprint registration 36 lakh people not completed yet
தமிழகத்தில் தற்போது 98.45 லட்சம் முன்னுரிமை (PHH) ரேஷன் கார்டுகள் மற்றும் 18.64 லட்சம் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இந்த இரு வகை கார்டுகளின் கீழ், மொத்தமாக சுமார் 3 கோடி 62 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இவர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக, தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு குறிப்பிட்ட அளவு கோதுமையை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த நிலையில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் ஆதார் சரிபார்ப்பு முறையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பொது விநியோகக் கடைகளில் உள்ள ‘பாயிண்ட் ஆப் சேல்’ (POS) கருவியில் விரல் ரேகை பதிவு செய்து உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், இந்த ஆதார்–விரல் ரேகை சரிபார்ப்பு பணி இன்னும் முழுமை பெறவில்லை.
தமிழகத்தில் சுமார் 36 லட்சம் பயனாளர்கள் இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாத நிலையில் உள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில்,“விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பயனாளர்களின் பதிவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கென மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
English Summary
Important notice ration card holders Fingerprint registration 36 lakh people not completed yet