'முதல்வர் மு.க.ஸ்டாலின் மதவாதப் போக்குடன் நடந்து கொள்கிறார். திமுக மதவாதக் கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது; தேர்தலுக்கான சதி இது'; நாராயணன் திருப்பதி..!
Narayanan Thirupathi says that Chief Minister MK Stalin is behaving with a communalistic attitude
''கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதவாதப் போக்குடன் நடந்து கொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மதவாதக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது'' என பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
ராமேசுவரத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மதவாத சிந்தனையை தூண்டி விட்டு, மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு மிகப் பெரிய சதித் திட்டத்தை தமிழகத்தில் வருகின்ற தேர்தலிலே அரங்கேற்றுவதற்கான முயற்சியை திமுகவும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் செய்கிறார்களோ என்கின்ற ஐயம் உள்ளதாக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோயில்களில் அரசியல் பேசக் கூடாது என்று சொல்பவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் முழுமையாக அரசியல் பேசி, பாஜகவையும் பிற இயக்கங்களையும் குற்றம் சொல்லி ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த தேர்தலுக்காக செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பான்மையின மக்களின் மனதை புண்படுத்தி, அதன் மூலம் சிறுபான்மை மக்களை குளிர்விக்கலாம் என்று பணிகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
அதேநேரத்தில், வேறு சில மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் முதல்வர் காட்டுகின்றார் என்றும், ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுப் போய் இருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார், அதாவது, தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், பள்ளிக்கூடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றதாகவும், பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திமுக ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இதை திராவிட மாடல் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்றும், இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழகம் தக்க பதிலடி தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று, திமுகவை தோல்வியைத் தழுவ வைக்கப் போகிறது என்றும் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வரும், காங்கிரஸ் கட்சியினரும் நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மாக காந்தியடிகளின் பெயரை எடுத்து விட்டார்கள் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே மகாத்மா காந்தியை பற்றி மிக கொச்சையாக பேசியவர்கள் திராவிட கட்சியை சார்ந்தவர்கள் தான். அதற்கான ஆதாரங்கள் திராவிட கழக புத்தகங்களிலேயே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Narayanan Thirupathi says that Chief Minister MK Stalin is behaving with a communalistic attitude