மனிதநேயத்தை குறிவைத்த மோசடி...? - உதவிய கை… ஏமாற்றப்பட்ட ஜி.வி.பிரகாஷ்...!
scam targeting humanitarianism helping hand GV Prakash cheated
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனித்த அடையாளம் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசை, நடிப்பு என பரபரப்பான பணிச்சுமை இருந்தாலும், யாராவது உதவி கேட்டால் தயங்காமல் மனிதநேயத்துடன் கை கொடுப்பவர் என்பதாலேயே ரசிகர்களிடையே அவர் தனி மரியாதை பெற்றுள்ளார்.
அந்த நிலையில், எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷிடம் உருக்கமான ஒரு உதவி கோரிக்கை வந்தது. அந்த பதிவில், “சிறு வயதிலேயே தந்தையை இழந்தோம். தாய் தான் வேலை செய்து எங்களைக் கல்வி கற்றார்.

தற்போது அம்மாவும் இறந்துவிட்டார். இறுதி சடங்கு நடத்த கூட பணமின்றி தவிக்கிறோம். நானும் என் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.இந்த பதிவை பார்த்த ஜி.வி.பிரகாஷ் மனம் உருகி, அந்த நபரின் தொலைபேசி எண்ணை பெற்று உடனடியாக ரூ.20,000 பண உதவியை அனுப்பினார்.
தான் செய்த உதவியின் ஸ்கிரீன்ஷாட்டை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும், பலரும் அதனைப் பார்த்து அந்த கணக்கிற்கு பணம் அனுப்பத் தொடங்கினர்.ஆனால், சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் வேறு திசையில் திரும்பியது.
“அம்மா இறந்துவிட்டார்” என கூறி உதவி கேட்ட வீடியோ, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட ஒன்று என்றும், அதே வீடியோ யூடியூப்பில் ஏற்கனவே இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் பதிவுகள் வெளியாகின.
இதன் மூலம் ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கினர்.இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் மனிதநேயத்தை குறிவைத்து நடக்கும் மோசடிகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இத்தகைய போலி கதைகளால் உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கும் நம்பிக்கை இழப்பு ஏற்படுகிறது என்பதே பலரின் வேதனையான கருத்தாக உள்ளது.
English Summary
scam targeting humanitarianism helping hand GV Prakash cheated