ஜனநாயகன்’ இசை விழாவுக்காக மலேசியா புறப்பட்ட விஜய்...! - ரசிகர்கள் உற்சாகம்
Vijay departs Malaysia jana nayagan music festival Fans excited
தமிழ் திரையுலகின் மெகா ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர் விஜய், தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளார்.
அரசியல் பாதையில் கால் வைத்துள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படுவதால், இந்த படத்துக்கு ரசிகர்களிடையே அபாரமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.2026 பொங்கல் திருநாளை குறிவைத்து வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற பிரபலங்களும் நடிப்பில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவின் கோலாலம்பூரில் நாளை பிரமாண்டமான அளவில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மலேசிய அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த பேச்சுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், லோகேஷ் கனகராஜ், அட்லீ போன்ற முன்னணி இயக்குநர்களும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Vijay departs Malaysia jana nayagan music festival Fans excited