திமுக கூட்டணியில் தேமுதிகக்கு மேலும் ‘சர்ப்ரைஸ்’ – தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி!
More surprise for DMDK in DMK alliance Stalin shows generosity to DMDK a blow to Congress
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விஜயகாந்தின் தேமுதிக கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் சேர்ந்ததும் தேமுதிகக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தேமுதிகவின் சுதீஷ் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகளுக்கே ராஜ்யசபா இடம் வழங்க தயக்கம் காட்டிய நிலையில், தேமுதிகக்கு ராஜ்யசபா இடம் வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிகக்கு 6 முதல் 8 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தேமுதிகக்கு திமுக இன்னொரு முக்கிய வாய்ப்பை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதி தேமுதிகக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிக்கு விஜயகாந்துடன் வரலாற்று தொடர்பு உள்ளது. 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் முதன்முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2011 தேர்தலிலும் தேமுதிக வேட்பாளர் வி.முத்துக்குமார் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த 2021 தேர்தலில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் கார்த்திகேயன் 76,202 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பெற்ற நிலையில், பிரேமலதா 25,908 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், இந்த முறை விருத்தாச்சலம் தொகுதியை தேமுதிகக்கு ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் இருப்பதால், கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெறலாம் என்ற கணக்கில் பிரேமலதா இந்த தொகுதியை திமுகவிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன் சிட்டிங் எம்எல்ஏ ஆக உள்ளார். மீண்டும் போட்டியிட அவர் தயாராக இருந்த நிலையில், அந்த தொகுதியை தேமுதிகக்கு ஒதுக்க திமுக ஒப்புதல் அளித்தது காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
More surprise for DMDK in DMK alliance Stalin shows generosity to DMDK a blow to Congress