இத்தகைய துயர் இனி யாருக்கும் நிகழாமல்...., மநீம பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் A.G மௌரியா (IPS, Rtd.) இன்று விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள், அந்தந்தத் துறைத் தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் மூலம் 8.4.2022 அன்று திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் பத்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, பணி நிரந்தரத்திற்காகக் காத்திருந்தவர்களை இப்படி பணிநீக்கம் செய்திருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது. இச்செயலை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

துப்புரவுப் பணியாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், வாகன ஓட்டுனர்கள், கணிப்பொறி மென்பொருள் துறை சார்ந்த பணியாளர்கள் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள், இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகப் பணிகளை மட்டுமே செய்து பழகியவர்கள், பல்கலைக்கழகத்துக்காகவே நேரம் காலமின்றி உழைத்தவர்கள் இன்று சாலையில் அமர்ந்து போராடும் துயரமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பணி நிரந்தரமற்ற ஊழியர்கள் என்பதால் இவர்களுக்கான சம்பளமே மிகக் குறைவுதான். அந்தச் சொற்ப சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு செய்துவந்த வேலையும் பறிபோயிருக்கும் இந்தப் பணியாளர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் பணியாற்றுவதற்கான முழுக் கல்வித் தகுதியும் பெற்றவர்கள். 

இப்போதும் இந்தக் கல்வித்தகுதி அற்றவர்கள் இவர்களுக்கு முன்பாக வேலையில் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் பணியில் தொடர்வதும், ‘லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட்’ என்று சொல்லப்படும் கடைசியாகச் சேர்ந்தவர்கள் முதலில் வெளியேறுவது என்ற அடிப்படையில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதும் எந்தவிதத்திலும் நியாயமாகாது.

முழு கல்வித் தகுதியுடன், இத்தனை ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்த அனுபவமும் உள்ள இந்தப் பணியாளர்களை இப்போது நிதிநிலையை மட்டும் காரணம் காட்டி வெளியேற்றுவதில் நியாயம் இல்லை. இந்த 136 பேரில் நிறைய பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மீண்டும் வேலை தேடி அலைந்தாலும் மாற்றுப் பணி கிடைப்பது அரிதாகவே நிகழும். இதையெல்லாம் தமிழக அரசு கருணையுடன் பரிசீலிக்கவேண்டும்.

இவர்களது வருமானத்தைச் சார்ந்திருக்கும் குடும்பத்தாரின் நிலையையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், எழுத்துப்பூர்வமான ஆணை எதுவும் இல்லாமல் குழப்பத்திலும், துயரிலும் ஆழ்த்தும் இத்தகைய நடவடிக்கையை, தமிழக அரசு தலையிட்டு, கருணை அடிப்படையிலேனும், நிறுத்திவைக்க வேண்டும்.

மேலும், இத்தகைய பணிகளில் இருப்போரது பணிப் பாதுகாப்பு, பணி மூப்பு, மற்றும் பணி நிரந்தரம் குறித்த குழப்பமற்ற நெறிமுறைகளை அரசு பல்கலைக்கழகங்களுக்கு வகுத்துக் கொடுத்து, அவை நடைமுறைப்படுத்தப் படுவதையும் கண்காணித்து உறுதிப்படுத்தவேண்டும். இத்தகைய துயர் இனி யாருக்கும் நிகழாமல் காப்பது மக்களாட்சியின் கடமை. எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, எளிய மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM Say About Kamarajar University Staff Issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->