அரசியல் களத்தில் சீறிய அமைச்சர் ராஜ்மோகன்...! - 'சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் விளைவுகள் மோசமாகும்' என காட்டம்...!
Minister Rajmohan anger political arena If red cloth belittled consequences worse
ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் குறித்து முரசொலி வெளியிட்ட கருத்துகளை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறுகையில், “மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அது அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறிய செயல். தன் வாழ்நாளையும், தனிப்பட்ட வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம்.காவேரி கரையோரத்தில் பிறந்து, சிவப்பு கொள்கையை தோளில் சுமந்து மக்கள் நலனுக்காக அவர் நடத்திய போராட்டங்களையும் சமூகப் பணிகளையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது.

அவர் செய்த சேவைகளை ஒரு மனிதன் ஒரு ஆயுள் முழுவதும் செய்தாலும் ஈடுகொடுக்க முடியாது.அப்படிப்பட்ட உயர்ந்த மனிதரை விமர்சிக்க அரசியல் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் தனிநபர் மரியாதையை குலைக்கும் வகையில் இழிவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
மேலும், “அரசியல் என்பது கருத்து மோதல்களின் மேடை மட்டுமல்ல; அது நாகரிகத்தின் அடையாளமாகவும் இருக்க வேண்டும். இன்று பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் அரசியல் கலாச்சாரத்திற்கே களங்கம் விளைவிப்பவை.கலைஞர் உயிருடன் இருந்திருந்தால், இத்தகைய கருத்துகளை நிச்சயம் வன்மையாக கண்டித்திருப்பார்.
அரசியல் விவாதங்கள் மரியாதை எல்லைக்குள் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.சி.வி. சண்முகத்தையும் பெ. சண்முகத்தையும் ஒப்பிட்டு கருத்து வெளியிடுவது, இருவரின் அரசியல் பயணத்தையும் தவறாக சித்தரிக்கும் முயற்சியாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “சிவப்பு சிந்தனையையும், அதனை வாழ்வாக கொண்டவர்களையும் இவ்வாறு சிறுமைப்படுத்த முயன்றால் அதற்கு கடுமையான எதிர்வினை இருக்கும். மூத்த கம்யூனிஸ்ட் தலைவரை இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது.அனைவரும் அரசியல் நாகரிகத்தின் எல்லையை உணர்ந்து அதற்குள் செயல்படுவது காலத்தின் அவசியம்” என ராஜ்மோகன் தெரிவித்தார்.
English Summary
Minister Rajmohan anger political arena If red cloth belittled consequences worse