சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் பேச மறுத்த அமைச்சர் கீர்த்தனா; உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி..!
Minister Keerthana Refuses to Speak at Firecracker Manufacturers Meeting in Sivakasi
தவெக சார்பில் போட்டியிட்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு, முதல் பெண் எம்.எல்.ஏவான கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறைக்கான அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் தேர்தல் பிரசாரத்தின் போது பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன் என பிரச்சாரம் செய்து வந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின், விருதுநகர் வந்த அவர், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உடன் ஆலோசனை மற்றும் ஆலோசிக்க குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும், சனிக்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி, இன்று பிற்பகலில் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மாற்று கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் உடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினார். பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் கீர்த்தனா எதுவும் பேசாமல் கூட்டத்தை முடித்துள்ளார்.

அப்போது உற்பத்தியாளர்கள் சிலர் அமைச்சரை பேசுமாறு கூறிய நிலையில், அதற்கு அவர் 'உங்களிடம் மிக விரிவாக பேச வேண்டும் என எனக்கு ஆசை. விட்டிருந்தால் ஒரு மணி நேரம் கூட பேசியிருப்பேன். ஒரு சில காரணத்தினால், காலம் கருதி பின்பு பேசுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் உடன் அமைச்சர் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக, நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம், விருதுநகர், சிவகாசி என அடுத்தடுத்து 03 இடங்களில் பட்டாசு தொழில் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அமைச்சர் பேட்டி அளித்த நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசாததால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Minister Keerthana Refuses to Speak at Firecracker Manufacturers Meeting in Sivakasi