பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து மே 20 ஆர்ப்பாட்டம்; இடதுசாரிக் கட்சிகள் கூட்டறிக்கை..! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. ((பெ. சண்முகம்) மாநில செயலாளர்- சிபிஐ(எம்), (மு. வீரபாண்டியன்), மாநில செயலாளர் -   சிபிஐ, (பழ. ஆசைத்தம்பி) மாநில செயலாளர் - சிபிஐ(எம்.எல்) விடுதலை)

கூட்டறிக்கை;

''பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயு கிலோ ரூ 2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். இத்தகைய தாக்குதலை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.

மே 1 முதல் ஏற்கெனவே வணிக கேஸ் சிலிண்டர் விலைகள் செங்குத்தாக உயர்த்தப்பட்டன. உதாரணமாக 19.5 கிலோ சிலிண்டர் விலை ரூ 2,244 லிருந்து – ரூ 993 அதிகரிப்போடு ரூ 3,237 ஆக உயர்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலையை அது உருவாக்கியது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல இத்தகைய தாக்குதல் வரப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பை பிரதமர் மோடி ஒரு சில நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு விட்டார். பொதுப் போக்குவரத்தில் பயணியுங்கள், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் என்றெல்லாம் அறிவுரைகளை பொழிந்தார். ஆகவே, இந்த விலை உயர்வு எண்ணெய் வணிக நிறுவனங்களின்  சுயேச்சையான முடிவு அல்ல. ஒன்றிய பாஜக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பே ஆகும்.

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சுழல் விளைவு கடுமையான பாதிப்புகளை எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் ஏற்படுத்தக் கூடியதாகும். போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி பலசரக்கு, காய்கறி, பழம், பால், மருந்து, நுகர்வு பொருள்கள் என எல்லாவற்றின் விலை உயர்வுக்கும் இது வழிவகுக்கும். காரணம் வாகனப் போக்குவரத்து கட்டணத்தில் 55 சதவிகிதம் வரை டீசல் செலவினமே ஆக்கிரமிக்கிறது.  விவசாயத்தில் டிராக்டர், நீர்ப்பாசனம் போன்ற செலவுகள் மீதும் எதிர்மறைத் தாக்கத்தை உருவாக்கும். 3 சதவீதம் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தால் அது குறைந்தபட்சம் 15 சதவீத உயர்வாக சில்லறை பணவீக்கத்தில் பிரதிபலிக்கும் என பொருளாதார மதிப்பீடுகள் கூறுகின்றன. இதன் சுமை முழுவதையும் சாதாரண, நடுத்தர மக்களே சுமக்கப் போகிறார்கள் என்பதே இந்த விலை உயர்வின் விபரீதம். கிக் மற்றும் செயலி தொழிலாளர்கள் இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே டெல்லியை விட்டு பல்லாயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுக்களோடு சொந்த ஊர்களுக்கு வெளியேறியதை கண்டு தேசமே திகைத்தது.

போரும், ஹோர்முஷ் நீரிணை நெருக்கடியும் காரணமாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலர்களில் இருந்து 110 டாலர்கள் வரை உயர்ந்திருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவே இல்லை. 2020 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்த போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கூடுதல் வரிகளைப் போட்டு அரசின் கஜானாவை நிரப்புகிற வேலையை பாஜக அரசு செய்தது. ஆனால், இப்போது சர்வதேச விலைகளை கைகாட்டி மக்களை ஏமாற்ற முனைகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் வருவாய் திரட்டல் முயற்சியில் எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதியே ஆகும்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2019 இல் வழங்கப்பட்ட பெரும் வரிச் சலுகை இன்று வரை அதீதமான செல்வக் குவிப்பிற்கு வழி வகுத்துள்ளது.

போர் ஒருபுறம் உலக மக்களின் நிம்மதியை அலைக்கழிக்கிறது எனில், அரசு தொடுக்கிற பொருளாதாரப் போராக உள்நாட்டிலும் மக்களின் அமைதியை, நிம்மதியை இத்தகைய விலை உயர்வுகள் சீரழிக்கின்றன. பெட்ரோலியப் பொருட்கள் அத்தியாவசியமானது என்ற முறையில் மானியம் வழங்கி இத்தகைய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் 2026 மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் நலனை முன்னிறுத்தி நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆதரவு நல்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leftist parties issue a joint statement announcing that a protest will be held on May 20 to condemn the hike in petrol and diesel prices


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->