அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணிச் செயலாளருமான வைகைச் செல்வனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்திருப்பது அக்கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தனது விலகல் கடிதத்தில் “மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு” என்று வைகைச் செல்வன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, “இயக்கமும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது” என்று கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, அதிமுகவில் இருந்து வெளியேறும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எட்டு முன்னாள் அமைச்சர்கள் தற்போது தவெக பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மட்டும் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
ஒரே நாளில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து வெளியேறி வருபவர்களை தவெகவில் இணைத்துக்கொள்ள கட்சித் தலைமை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வர விரும்புபவர்களுக்கு தவெகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வைகைச் செல்வனும் அதிமுகவில் இருந்து விலகியிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
வைகைச் செல்வன் அடுத்து தவெகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தனது விலகல் முடிவு குறித்து வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள கடிதம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
“அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்” என்று அவர் தனது கடிதத்தின் தொடக்கத்திலேயே அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஒரு தலைவர் தானே அழிந்தாலும் தனது கொள்கைகளும் இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார். ஆனால், இயக்கமும் கழகத் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை” என்று வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து நேரடியாக பெயரை குறிப்பிடாவிட்டாலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்தே கூறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
அதோடு நிற்காமல், அதிமுக தனது அடிப்படையான திமுக எதிர்ப்பு அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு என்ற தனது அடையாளத்தில் இருந்து அதிமுக சமரசப் பாதைக்கு சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அதிமுக தனது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டதாகவும் வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்ததன் காரணமாக, அதிமுக தனது வெற்றிப் பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.தேர்தல் காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைகைச் செல்வன் தனது கடிதத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
“தேர்தல் களத்தில் நான் தனித்துவிடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றிய போதிலும், தாம் புறக்கணிக்கப்பட்டதாக வைகைச் செல்வன் வேதனை தெரிவித்துள்ளார்.
“மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்ற அவரது வார்த்தைகள் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.தனது முடிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருக்குறளையும் வைகைச் செல்வன் மேற்கோள் காட்டியுள்ளார்.
“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று” என்ற திருக்குறளை குறிப்பிட்டுள்ள அவர், மதிக்காதவர்களின் பின்னால் சென்று ஒருவர் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் அவர் கெட்டுப்போனார் என்று சொல்லப்படுவது மேல் என்ற பொருளில் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
தன்னை மதிக்காத இடத்தில் தொடர்ந்து இருப்பதைவிட, அங்கிருந்து வெளியேறுவதே சரியான முடிவு என்ற தனது மனநிலையை இந்த திருக்குறள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மாணவப் பருவத்தில் இருந்தே அதிமுகவுடன் பயணித்த தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையையும் வைகைச் செல்வன் நினைவுகூர்ந்துள்ளார்.
“மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாக இந்த இயக்கத்தோடு பணியாற்றிய நான், தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கும்போது என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை” என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தற்போது தனது விலகலுக்கான அனைத்து காரணங்களையும் வெளிப்படையாக கூறவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இன்னும் பல விஷயங்களை பேசுவேன் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.இந்த ஒரு வரி அதிமுகவுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, “நேரம் வரும்போது இன்னும் இதுகுறித்து பேசுவேன்” என்று அவர் கூறியிருப்பதால், அதிமுக தலைமை மற்றும் தேர்தல் காலத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களை அவர் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தனது கடிதத்தின் இறுதியில் வைகைச் செல்வன் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் மேலும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
“புதிய இடத்தில் நடுவதற்காக புடுங்கப்பட்ட செடியில் ஒட்டியிருக்கும் பழைய மண்ணைப் போல, இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக பயணித்த ஒரு இயக்கத்தில் இருந்து விலகும் தனது வலியை இந்த வார்த்தைகள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வெளியேறி தவெகவில் இணைந்து வரும் நேரத்தில், வைகைச் செல்வனின் விலகலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.குறிப்பாக, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றதாக ஏற்கனவே தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த குற்றச்சாட்டை அதிமுக தலைமை கடுமையாக மறுத்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகிய வைகைச் செல்வனும் அதே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக உண்மையிலேயே முயன்றதா என்ற விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
ஒருபுறம், முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நீண்டகால நிர்வாகிகள் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து வெளியேறி வருகின்றனர்.
இந்த தொடர்ச்சியான வெளியேற்றங்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து விலகிய வைகைச் செல்வன் அடுத்து எந்த அரசியல் பாதையை தேர்வு செய்யப்போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தவெகவில் இணைவாரா? அல்லது அரசியலில் இருந்து சில காலம் விலகி இருப்பாரா? “நேரம் வரும்போது இன்னும் பேசுவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் என்ன? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் வலம் வருகின்றன.
எது நடந்தாலும், “மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு” என்ற வலியுடன் வைகைச் செல்வன் வெளியேறியிருப்பது, ஏற்கனவே தொடர் விலகல்களால் சிக்கலில் இருக்கும் அதிமுகவுக்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.