''இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம்; அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்''; மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை..!
Manickam Thakur warns that we will not let ISRO be destroyed by private individuals
''60 ஆண்டு காலம் தன்னிறைவுக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நமது விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும் லட்சியத்தையும், இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு.''என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''ஒருபுறம் வானத்தை முட்டும் ராக்கெட்டுகள், நிலவையும் சூரியனையும் எட்டும் பெருமிதம், விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பிரம்மாண்டத் திட்டங்கள்... ஆனால், தேசமே கொண்டாடும் இந்த வெற்றிகளின் மறுபக்கம் என்ன?.
இரவு பகல் பாராமல் குடும்பங்களை மறந்து உழைத்த நமது விஞ்ஞானிகளின் தியாகம், தோல்விகளைக் கடந்து சிந்திய கண்ணீர், அவர்களின் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம்.
இதைவிடப் பெருங்கொடுமை என்னவென்றால் - ஒருபுறம் உலகமே வியக்கும் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் அதே கைகள், மறுபுறம் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகவும், முறையான ஊதியத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் அதிகார வர்க்கத்திடம் கோரிக்கை மனுக்களையும் கண்ணீர்க் கடிதங்களையும் அனுப்ப வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
நினைவிருக்கட்டும். 1969 ஆகஸ்ட் 15 அன்று, தொலைநோக்குப் பார்வையோடு நேருவும், இந்திரா காந்தியும், விக்ரம் சாராபாய் போன்ற மேதைகளும் இணைந்து, பொதுத்துறையின் வலிமையான அரணாக இஸ்ரோவுக்கு (ISRO) அடித்தளமிட்டது காங்கிரஸ் பேரியக்கம்.
கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் தன்னிறைவுக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நமது விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும் லட்சியத்தையும், இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு.
விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது மட்டும் ஓடிவந்து கேமரா வெளிச்சத்தில் நின்று போட்டோஷூட் நடத்தும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்கள் பணிக்காகவும் உரிமைக்காகவும் கடிதம் எழுதித் தவிக்கும்போது கண்களை மூடிக்கொள்வது ஏன்? சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் மோடி அரசுக்கு, அந்த சாதனையை நிகழ்த்தும் உழைக்கும் கைகளின் வலி ஏன் புரிவதில்லை?.
விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம்; அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Manickam Thakur warns that we will not let ISRO be destroyed by private individuals