திமுக கூட்டணியில் 6 தொகுதி கேட்கும் மநீம!திமுகவிடம் பேச தயாராகும் கமல்ஹாசன்! ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டி?
Maneema asks for 6 seats in DMK alliance Kamal Haasan ready to talk to DMK Contest under the Torch Light symbol
2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சி, குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டு சொந்த சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதிலும் மநீம பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற கூட்டணி கட்சிகள் இணக்கமான நிலைப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார்.
இதனிடையே, விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கடந்த முறை விட அதிக தொகுதிகளை கோரத் தயாராக உள்ளன. காங்கிரஸ் கட்சி விலகும் சூழல் ஏற்பட்டால், பிற கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற அரசியல் கணிப்பும் நிலவுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம், அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை சட்டசபைத் தேர்தலில் நேரடியாக களமிறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியபோது, “பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லை; நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி” என்று சுயவிமர்சனமாகக் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், கட்சி சார்பில் போராட்டங்கள் மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், ‘டார்ச் லைட்’ சின்னத்தில் தான் களம் காண வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை கமல்ஹாசனும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்திய ஆகிய தொகுதிகளை கேட்டு பெறுவதற்கான ஆலோசனையில் மநீம ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. வரும் பேச்சுவார்த்தைகளில் மநீமக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maneema asks for 6 seats in DMK alliance Kamal Haasan ready to talk to DMK Contest under the Torch Light symbol