புதிய கட்சி தொடங்கும் மல்லை சத்யா? புதிய கொடி.. கட்சியா? அமைப்பா? சஸ்பென்ஸ் வைத்த மல்லை சத்யா!
Mallai Sathya to start a new party New flag Party Organization Mallai Sathya has created suspense
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, இன்று (செப்டம்பர் 2) அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் புதிய கொடியை அறிமுகம் செய்தார்.
புதிய கொடி கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில், 7 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளது. விழாவில் முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், பொடா அழகுசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்குவாரா? அல்லது புதிய அமைப்பா? என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தார்.ஆனால், நவம்பர் 20 அன்று பெயர் அறிவிக்கப்படும் என கூறினார்.
இதற்கிடையே, விழாவில் வழங்கப்பட்ட நினைவு சின்னத்தில் “திராவிட குடியரசு விடுதலை கழகம்” என்ற பெயர் இடம்பெற்றிருந்ததால், அதுவே கட்சிப் பெயராக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, சமீபத்தில் வைகோவின் மகன் துரை வைகோக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தார்.
வாரிசு அரசியல் குறித்த இந்த எதிர்ப்பு, வைகோவுடனான உறவை முறித்தது.வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல, மல்லை சத்யா துரோகம் செய்துள்ளார்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
உண்ணாவிரத போராட்டம், விளக்கக் கடிதம், பதிலளிக்காத நிலை ஆகியவற்றுக்குப் பிறகு, மல்லை சத்யா கடந்த வாரம் மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
மதிமுகவை விட்டு விலகிய மூத்த தலைவர்களுடன் இணைந்து புதிய கொடியை அறிமுகம் செய்திருப்பது, மல்லை சத்யா தனித்த கட்சி தொடங்கும் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
அண்ணாவின் பிறந்த நாளில் புதிய கொடியை வெளியிட்டிருப்பது, திராவிட அரசியலில் புதிய அலை உருவாகும் சாத்தியத்தை காட்டுகிறது.
English Summary
Mallai Sathya to start a new party New flag Party Organization Mallai Sathya has created suspense