தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை பாஜகவால் மறைக்க முடியாது - சு.வெங்கடேசன் ஆவேசம்!
Madurai MP S Venkatesan Keezhadi Excavation BJP
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது "விரைவில் வெளியிடப்படும்" என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் வரும் 27-ந்தேதி பாராளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.
"தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்" என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பா.ஜ.க. அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பா.ஜ.க. அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல.. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது! அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. "கீழடி தமிழர்களின் தாய்மடி" என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai MP S Venkatesan Keezhadi Excavation BJP