டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி ஊழல்! அதிரவைக்கும் அமலாக்கத் துறை!
Tasmac Scam ED Case
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை அமலாக்கத் துறையின் தீவிர நடவடிக்கைகளால் பரவலாக வெளியே வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திடீர் சோதனையில் ரூ.1,000 கோடி அளவிலான நிதி மோசடி நடந்ததாகத் தகவல் வெளியாகிய நிலையில், பார் டெண்டர் முறைகேடு மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரே நபர் பல ஜிஎஸ்டி எண்கள் மூலம் வங்கி டிராஃப்ட் எடுத்து பார்கள் மீது டெண்டர் எடுத்தது, பின்னர் அவை துணை ஒப்பந்தங்கள் மூலம் பிறரிடம் மாற்றப்பட்டதும், அவ்வழி அதிக விலையில் மது விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. டாஸ்மாக் அருகேயுள்ள கட்டிட உரிமையாளர்களிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ்கள் பெறும் முறையிலும் மோசடி நடந்துள்ளதாம்.
மேலும் அனுமதி இல்லாத பார்கள் பல இடங்களில் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டிருப்பதும், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலாண் இயக்குநர் விசாகன், பொது மேலாளர்கள் ஜோதி சங்கர் மற்றும் சங்கீதா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய ஆவணங்களும் தகவல்களும் கிடைத்துள்ளன. இதனையடுத்து 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 20 பேர் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக நேரடியாக தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தை மையமாகக் கொண்டு நடந்த மிகப்பெரிய அளவிலான நிதி மோசடி முழுமையாக வெளிப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.