திருப்பரங்குன்றம் தீபம்: உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!
madurai HC thirupurangundram issue fasting protest
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, டிசம்பர் 13ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2,000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், 1926ஆம் ஆண்டு உரிமையியல் பிரச்சினை எழும் வரை தீபம் தீபத்தூணில் தான் ஏற்றப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வலியுறுத்தி, டிசம்பர் 13ஆம் தேதி மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்ததாகவும், ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இன்று (டிசம்பர் 11) இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்குப் பதிலாக மாற்று இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், நீதிபதி இதை ஏற்க மறுத்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரும் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம். ஆனால், போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும், தனி நபர்களையோ அல்லது அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் போராட்டத்தில் பேசக்கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
English Summary
madurai HC thirupurangundram issue fasting protest