காதல், கர்ப்பம், மோசடி...! திருமண மண்டபத்தில் வெளிச்சம் பார்த்த ரிஷப்பின் இரட்டை வாழ்க்கை...!
Love pregnancy deception Rishabhs double life came light wedding hall
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியைச் சேர்ந்த ரிஷப் என்பவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வந்தார். அதே கல்லூரியில் கல்வி கற்ற கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
தினசரி பழகியதில் தொடங்கிய நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் உறவின் போது, திருமணம் செய்வதாக உறுதியளித்து இளம்பெண்ணை ரிஷப் பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பு முடிந்த பின் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்ததும், இதை ரிஷப்பிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ரிஷப், கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்ய வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கைக்கு, கர்ப்பத்தை கலைத்தால் தான் திருமணம் செய்வேன் என ரிஷப் கூறியதாக தெரிகிறது. இதனால், மனவேதனையுடன் இளம்பெண் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.இதன் பின்னர், ராய்ச்சூரில் உள்ள ஒரு கோவிலில் இளம்பெண்ணுக்கு ரிஷப் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
ஆனால், பெற்றோரின் சம்மதம் பெற்று விரைவில் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி, இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து, திடீரென ரிஷப் தனது காதல் மனைவியுடன் தொடர்பை துண்டித்துள்ளார். அவரை தொடர்பு கொள்ள இளம்பெண்ணால் முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ரிஷப் வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. ரிஷப் தனது இரண்டாவது திருமணத்துக்கான அழைப்பிதழை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நண்பர்களை அழைத்திருந்ததை பார்த்து, அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக கொப்பலில் இருந்து ராய்ச்சூருக்கு வந்த அவர், டவுனில் உள்ள திருமண மண்டபத்துக்கு நேரடியாக சென்றார்.
அங்கு மற்றொரு பெண்ணை மணமுடிக்க தயாராக இருந்த ரிஷப்பை எதிர்கொண்டு, அனைவரின் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை காதலித்து ஏமாற்றியதும், கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தியதும் குறித்து அவர் வெளிப்படையாக கூறினார்.
இந்த சம்பவத்தால் திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் வீட்டார் மற்றும் ரிஷப் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியில், ரிஷப்பின் இரண்டாவது திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவங்கள் குறித்து இளம்பெண் ராய்ச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிஷப் மற்றும் இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Love pregnancy deception Rishabhs double life came light wedding hall