காவலர்கள் மறுப்பு, நீதிமன்றம் அனுமதி...! - திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதம் தொடக்கம்...! - Seithipunal
Seithipunal


மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகப்பெருமான் கோவிலின் வரலாற்றுப் பெருமையை விரிவாக எடுத்துரைத்துள்ளார். திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் குகைக் கோவிலாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானது என்பது உறுதியாகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1926-ம் ஆண்டு சிவில் பிரச்சினை எழும் வரை, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், அந்த பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என மனுதாரர் குற்றம்சாட்டினார்.இதனை எதிர்த்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே அமைதியான உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வேலவதாஸ் மற்றும் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி, திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டங்களுக்கு முழுமையான தடை விதித்திருப்பது சட்டவிரோதம் என வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அபுல்கலாம் ஆசாத், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால், பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆதரவாகவோ எதிராகவோ யாரும் செயல்படக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மலைப்பகுதியிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்கலாம் எனவும் கூறினார்.ஆனால், அந்த மாற்று இடத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் கோரிய இடத்திலேயே அதிகபட்சமாக 50 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். மேலும், தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகளை குறிவைத்து பேசக் கூடாது, கட்சி கொடிகள் பயன்படுத்தக் கூடாது, ஒரே ஒரு மைக் மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தற்போது உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police refusal court permission Hunger strike begins Thiruparankundram


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->