58 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசம் – அடிகோடிட்டு காட்டும் மாணிக்கம் தாகூர்.. திமுக மீது காங்கிரஸ் அடுத்த அட்டாக்!
Low vote margin in 58 seats Manickam Thakur underlines Congress next attack on DMK
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் 58 இடங்களில் வெற்றி வாக்கு வித்தியாசம் 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்ததாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், திமுகவால் மீண்டும் ஆட்சி அமைப்பது சிக்கலாகும் என்பதைக் காங்கிரஸ் மறைமுகமாக உணர்த்துகிறது என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் வெளிப்படையாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தரப்பில், 38 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 அமைச்சரவை பதவிகள் வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையையும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணமும் காங்கிரஸ் தரப்பில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட சூழலில், விஜய் அமைதி காத்து வந்தாலும், காங்கிரஸ் எம்பிக்களும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தது கவனம் பெற்றது.
மேலும், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்ததோடு, திமுகவை விமர்சிக்கும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 58 வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்ததை அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், “காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி வெற்றி பெறுவது கடினம்” என்ற செய்தியை அவர் மறைமுகமாக முன்வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதே பதிவில், “திமுக கூட்டணியை காங்கிரஸ் ஒருபோதும் வேண்டாம் என்று கூறவில்லை; ஆட்சியில் உரிய பங்கு மட்டுமே கேட்கிறோம்” என்ற காங்கிரஸ் ஆதரவாளரின் கருத்தையும் மாணிக்கம் தாகூர் பகிர்ந்துள்ளார். இதனுடன், “அரசவை கவிஞர்களுக்கும் ஐடி விங் மகான்களுக்கும் இது ஒரு நல்ல பாடம்” என அவர் குறிப்பிட்டது, திமுக தரப்பில் மேலும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த கருத்துப் போர்கள் திமுக – காங்கிரஸ் உறவில் விரிசலை அதிகரிக்குமா, அல்லது கடைசி நேரத்தில் சமரசம் ஏற்படுமா என்பதே தற்போது தமிழக அரசியல் களத்தின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
Low vote margin in 58 seats Manickam Thakur underlines Congress next attack on DMK